மந்திர 500 ரூபாயை தொட்டால் 5 ஆயிரம் கிடைப்பதாக முகநூல் பக்கத்தில் நூதன மோசடி
- ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் முகநூல் பக்கத்தில் மோசடியாக லிங்க்கை அனுப்பி தொடர்ந்து பணத்தை சுருட்டி வருவது தெரியவந்து உள்ளது.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சினி. இவர் பள்ளி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
வினோத் தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில்" 500 ரூபாய் மந்திர நோட்டைத் தொட்டு வெற்றி பெறுங்கள்.ரூ.5 ஆயிரம் கேஷ் பேக் பெறுங்கள்" என்று கவர்ச்சியான திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்தவுடன் பணம் கிடைக்கும் ஆசையில் அந்த பதிவை வினோத் கிளிக் செய்தார். உடனடியாக அவரது செல்போனுக்கு உங்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வந்து இருப்பதாக குறுந்தகவல் வந்தது.
இதனால் மகிழ்ச்சியுடன் வினோத் தனது வங்கி கணக்கு இருப்பை சரி பார்த்தபோது அதில் இருந்த மனைவியின் சம்பளப் பணமான ரூ. 4650 மொத்தமாக எடுக்கப்பட்டு வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சிறிது நேரத்தில் மற்றொரு குறுஞ்செய்தி அவருக்கு வந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். மோசடி கும்பல் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் முகநூல் பக்கத்தில் மோசடியாக லிங்க்கை அனுப்பி தொடர்ந்து பணத்தை சுருட்டி வருவது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.