தமிழ்நாடு

35 தென்னை மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்து அசத்திய விவசாயி

Published On 2024-01-02 08:05 GMT   |   Update On 2024-01-02 08:05 GMT
  • தென்னை மரங்களை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் நடுவதற்கு திட்டமிட்டார்.
  • 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (வயது 54). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்க நினைத்தார். அப்போது அந்த இடத்தில் சுமார் 50 தென்னை மரங்களில் காய்கள் காய்த்து இருந்தது.

அதனை வெட்டுவதற்கு மனமில்லாத சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் அந்த தென்னை மரங்களை நடுவதற்கு திட்டமிட்டார். இதையடுத்து மரங்களில் காய்த்து இருந்த தேங்காய்களை பறித்து விற்பனை செய்தார். பின்னர் 50 தென்னை மரங்களில் 35 தென்னை மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து, கிரேன் மூலம் லாரியில் ஏற்றி சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள மற்றொரு தோட்டத்தில் நடவு செய்தார். 

இதுகுறித்து விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், தனது தந்தை காலத்தில் வைக்கப்பட்ட இந்த தென்னை மரங்களில் இன்று வரை நல்ல முறையில் காய்கள் காய்த்து இளநீர், தேங்காய், கொப்பரை தேங்காய், மட்டை மற்றும் ஓலை என பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீண்டும் இந்த மாதிரி மரம் வளர்க்க 20 வருடம் ஆகும். எனவே என் தந்தை கந்தசாமி நினைவாக இந்த மரங்களை இவ்வாறு இடம் மாற்றி மீண்டும் புத்துயிர் கொடுத்து வளர்த்து வருகிறேன்.

இந்த 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தேன். அதில் 23 மரங்கள் தற்போது மீண்டும் காய்கள் காய்க்க ஆரம்பித்துள்ளது. இரண்டு மரங்கள் மட்டும் பட்டுப்போனது. இன்று 10 மரங்கள் கொண்டு வந்து மாற்றி உள்ளோம். இவை அனைத்தும் நல்ல முறையில் உள்ளது. குறிப்பாக இடமாற்றம் செய்யப்பட்ட 35 மரங்களில் 33 மரங்கள் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. காய்கள் காய்க்கவும் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News