கர்நாடகா அரசை கண்டித்து திருவாரூரில் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வேளாண்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அடுத்த 15 தினங்களுக்கு 5000 கன அடி வீதம் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.