வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி- அருவிகளுக்கு செல்ல தொடர்ந்து தடை
- திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.
- அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.
கூடலூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது.
இதனிடையே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கணி, ஊத்தாம்பாறை, கொட்டக்குடி, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
மேலும் போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 48.10 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 48.39 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 292 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 877 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 472 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1790 மி. கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 621 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.40 அடி. வரத்து 280 கன அடி. இருப்பு 328 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 88 கனஅடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வராகநதிக்கரையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கும்பக்கரை, மேகமலை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராட வந்து வனத்துறை கட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பெரியாறு 9.6, தேக்கடி 21.8, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 4.4, போடி 3.2, வைகை அணை 74.8, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 31, பெரியகுளம் 4.6, அரண்மனைபுதூர் 1.8, ஆண்டிபட்டி 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.