மதுபோதையில் மனைவி, மாமியாரை தாக்கிய மருமகனை அடித்து கொன்ற மாமனார்
- திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
- செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35) பி.இ. படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான நிதிநத்தம் வந்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை ரகுபதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுபதிக்கு முன்னதாகவே மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ரகுபதி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி சத்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
நேற்று வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்து சத்யாவை மதுபோதையில் தாக்கி உள்ளார். ரகுபதி தாக்கியதில் வலி தாங்க முடியாமல் சத்யா அலறினார். இதனால் இவர்களது வீட்டின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சத்யாவின் தாய் சசிகலா (50) மகளின் அலறல் சத்தம் கேட்டு ரகுபதி வீட்டிற்கு ஓடி வந்து ஏன் என் மகளை அடித்து துன்புறுத்துகிறாய்? என்ன பிரச்சனை? என்று ரகுபதியிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி மதுபோதையில் அங்கு கீழே கிடந்த செங்கலை எடுத்து மாமியார் சசிகலாவை முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பற்கள் உடைந்து பலத்த காயம் அடைந்த சசிகலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த ரகுபதியின் மாமனார் செல்வராஜ் (55) தொடர்ந்து குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்து வருகிறாயே என்று கேட்டபோது ரகுபதிக்கும் செல்வராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு வாக்குவாதமாக மாறி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரகுபதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரகுபதியின் தாய் சகுந்தலா ஆவினங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ரகுபதி மாமனார் செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மதுபோதையில் மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை மாமனார் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.