தமிழ்நாடு

பங்களா வீட்டுக்குள் சிறுத்தை மெதுவாக நுழைவதை காணலாம்.

பட்டாசு சத்தத்திற்கு பயந்து பங்களா வீட்டில் பதுங்கிய சிறுத்தை... 6 பேரை கடித்து குதறியது

Published On 2023-11-14 08:40 IST   |   Update On 2023-11-14 08:40:00 IST
  • எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது.
  • குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.

அப்போது எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது. இதை கண்ட அவர் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயினர். மேலும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.

ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால், மிரண்டு போன சிறுத்தை பயத்தில் அங்கேயே பதுங்கியது. உடனே தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர், பங்களா வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்ட முயன்றனர். அவர்கள் மேல் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. தீயணைப்பு வீரர்கள் முரளி(வயது 56), குட்டி கிருஷ்ணன்(59), கண்ணன்(54), விஜயகுமார்(32), வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார்(32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்களை சக தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

சிறுத்தை புகுந்த பங்களா வீட்டை காணலாம்.

இதை அறிந்ததும், முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், இணை இயக்குனர் அருண், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வனத்துறையினர் கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தி விடிய விடிய சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 26 மணி நேரத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 6 மணிக்கு அந்த வீட்டில் இருந்து சிறுத்தை வெளியேறியது. இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

வனப்பகுதியில் இருந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருந்து வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் போக்கு காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News