சென்னையில் தனியார் பள்ளியில் கல்வி கட்டணமின்றி படிக்க கடும் போட்டி
- ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத இடங்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும்.
- ஒரு மாணவர் அருகில் உள்ள 4 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத இடங்கள் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட பெற்றோர்கள் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்கள் எண்ணிக்கை பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதன்படி பள்ளியில் உள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெற்ற பள்ளிகளில் இன்று குலுக்கல் நடைபெற்றது. கல்வி அதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலர்கள், பள்ளி முதல்வர்கள் முன்னிலையில் மாணவர்கள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர்.
ஒரு மாணவர் அருகில் உள்ள 4 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இதில் ஏதாவது ஒரு பள்ளியில் இடம் ஒதுக்கப்படும். சென்னை மாவட்டத்தில் 636 தனியார் பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது:-
சென்னை மாவட்டத்தில் உள்ள 636 தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்து உள்ளன. 10 ஆயிரத்து 342 குழந்தைகள் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் அனைத்து தனியார் பள்ளிகளிலும் குலுக்கல் நடந்தது. மாணவர்கள் பெயரை சீட்டில் எழுதி ஒரு பெட்டியில் போட்டு அதில் இருந்து ரேண்டமாக ஒவ்வொரு வராக தேர்வு செய்யப்பட்டனர். பெற்றோர்கள் முன்னிலையில் இந்த குலுக்கல் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் இல்லாமல் சேர்க்க ஏழை பெற்றோர்கள் இன்று ஆர்வத்துடன் குலுக்கலில் கலந்து கொண்டனர். குறைந்த இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் முயற்சி செய்ததால் கடுமையான போட்டி நிலவியது.