தமிழ்நாடு

பெங்களூரு விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதை காணலாம்.

திருச்சியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் "திடீர்" கோளாறு: 74 பயணிகள் தவிப்பு

Published On 2023-11-16 06:16 GMT   |   Update On 2023-11-16 06:16 GMT
  • விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.
  • விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பயணிகள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கே.கே. நகர்:

திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு சேவைகளாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று உள்நாட்டு சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மற்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து மேற்கண்ட விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து வேறு விமானங்கள் மூலமோ அல்லது தொடர் விமானங்கள் மூலமோ பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இருந்து வந்தது. ஏற்கனவே இந்த விமானத்தின் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து புதுடெல்லி, புனே, மும்பை நகரங்களுக்கு செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்ட றியப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தொடர் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் எப்போது புறப்படும்? என்றும், தற்போது சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன செய்ய இருக்கிறார்கள்? என்பது குறித்தும் இதுவரை பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News