மிச்சாங் புயல் பாதிப்பு- விரைவில் வெள்ள நிவாரணம்..!
- சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது.
18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
சென்னையில் 77 இடங்களில் மின் தடை நீடிக்கிறது. மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு, மின் இணைப்பு சீராக்கப்படும்.
சென்னையில் 22 சுரங்கப் பாதைகளில், 20 திறக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள பாதைகள் சரிசெய்யப்படும்.
நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 50 வாகனங்களும், நாளை 150 வாகனங்களும் இயக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஏரிகள் பாதிக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், நெடுஞ்சாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் நீங்கிய பிறகு சேத மதிப்பு மறு ஆய்வு செய்யப்படும்.
திருப்புகழ் கமிட்டி அடிப்படையில் குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு தண்ணீர் தேங்கும் பல இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கும் நிலை இல்லை.
மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ரூ.5,060 கோடி கேட்டுள்ளோம். விரைவில் மத்திய குழு வரும் என தெிர்பார்க்கிறோம்.
மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.