ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- ஒருநாள் முழுக்க சென்னையில் தேங்கிய மழைநீர் கடலுக்குள் செல்வதில் பிரச்சினை இருந்தது.
- ஆக்கிரமிப்பு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை அகற்றுகிறோம்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எடப்படி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கு தார்மீக உரிமை இல்லை. சென்னை, காஞ்சிபு ரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் தொற்றுநோய் பாதிப்பு குறைந்து உள்ளது.
சென்னையை பொருத்தவரை புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் தண்ணீர் முழுமையாக போய்விட்டது. முதல் நாளில் கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆறு, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய ஆறுகளில் சென்ற மழைநீர் கடலில் உள்வாங்கவில்லை. கடலின் சீற்றம் மற்றும் மையம் கொண்டிருந்த புயல் ஆகியவை காரணமாக கடல் அலைகள் 7 முதல் 8 அடி வரை உயர்ந்து தண்ணீரை உள்வாங்கவில்லை. அதன் காரணமாக ஒருநாள் முழுக்க சென்னையில் தேங்கிய மழைநீர் கடலுக்குள் செல்வதில் பிரச்சினை இருந்தது.
அன்று இரவு 12 மணிக்கு மழை முடிந்தவுடன் வெள்ளம் சீராக கடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிட்டது. அது கடலுக்குள் செல்ல ஆரம்பித்தவுடன் சென்னை நகருக்குள் இருக்கும் 22 நீரோடைகளான கால்வாய்களின் நீர் கடலுக்குள் போக வேண்டும். இந்த கால்வாய்களில் இருந்து நீர் 4 பிரதான கால்வாய்களுக்கு சென்று அங்கிருந்து கடலுக்கு செல்ல வேண்டும். இதனால் தண்ணீர் வடிவதில் 2 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டது.
அதன் பிறகு சென்னை நகருக்குள் எங்கும் தண்ணீர் இல்லை. தாழ்வான பகுதிக ளில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து மோட்டார்களின் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இப்போது எங்கும் தண்ணீர் இல்லை. எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இன்னும் சென்னை நகருக்குள் தண்ணீர் இருக்கிறது என்று சொல்லாதீர்கள். ஆக்கிரமிப்பு எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். அதை அகற்றுகிறோம்.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு காரணம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வழிந்தோடியதால் ஏற்பட்டதாகும். 7 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் வந்த நீராகும்.
இதுவரை வரலாறு காணாத வகையில், வேறு எந்த பருவ மழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் டிசம்பர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 58 செ.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த பருவமழை காலங்களில் பெய்த மழையை காட்டிலும் 12 மடங்கு கூடுதலாகும். இதனால் தான் தண்ணீர் தேங்கியது. ஆனால் 2 நாளில் வெள்ளம் வடிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.