கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு
- பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது.
- சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.
போரூர்:
சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு நிலக் கோட்டை, அருப்புக் கோட்டை, உசிலம்பட்டி, ஈரோடு, ஓசூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.
இப்போது பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.
இதனால் பூ விற்பனைகளை கட்டியது. வரத்து குறைந்து இருந்த நிலையில் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீரென உயர்ந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கனகாம்பரம் ரூ.700-க்கு விற்பனை ஆனது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.150முதல் ரூ.200வரை விற்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை (கிலோவில்) வருமாறு:-
சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, ஜாதி-ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120.