நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40 சதவீத குழந்தைகள் பாதிப்பு- அசித்கோபால் பேச்சு
- உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார்.
- உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
தஞ்சாவூர்:
உலக உணவு பாதுகாப்பு நாளையொட்டி, தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசகருமான அசித்கோபால் பங்கேற்று பேசியதாவது:-
உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப் படுகிறார். பாக்டீரியா, வைரஸ்கள், பாதிக்கப்படக் கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயனப் பொருட்கள் கொண்ட அசுத்தமான உணவை சாப்பிடுவதால் 200-க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்றன.
நம் நாட்டு மக்கள் தொகையில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.
உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், உணவால் பரவும் நோய்களைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதாரத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பான உணவு உண்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.