தமிழ்நாடு

வனத்துறை சோதனை சாவடிக்கு தீ வைத்து சூறை: அஞ்செட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2023-08-08 04:21 GMT   |   Update On 2023-08-08 04:21 GMT
  • வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.
  • வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் கானட்டி முனியப்பன் கோவில் அருகில் வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களில் ஒருவர் நெற்றியில் டார்ச் லைட் மாட்டி இருந்தார். மற்ற 2 பேரில் ஒருவர் கையில் நாட்டுத் துப்பாக்கியும், மற்றொருவர் வாகனத்தை ஓட்டியபடியும் இருந்தார்.

இதையடுத்து வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றபோது மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிய 3 பேரும் சிறிது தூரத்தில் தவறி விழுந்தனர்.

இந்நிலையில் தவறி விழுந்தவர்களில் ஒருவர் மட்டும் வனத்துறையினரிடம் பிடிபட்டார்.

வனத்துறையினர் பிடித்த நேரத்தில் அந்த நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கிய அவருக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நாட்றாம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர்.

அவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கும், அஞ்செட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (வயது 48), கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரம் அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், முயல் வேட்டைக்காக அங்கு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

இந்நிலையில் வெங்கடேஷ் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அட்டப்பள்ளம் அருகே பூமரத்துகுழி என்னும் இடத்தில் திரண்டனர்.

அவர்கள் அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வெங்கடேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News