தமிழ்நாடு (Tamil Nadu)

விநாயகர் சிலைகள்

தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள்

Published On 2022-08-24 05:32 GMT   |   Update On 2022-08-24 05:32 GMT
  • இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.
  • கடந்த 2 ஆண்டாக பல்வேறு கட்டுப்பாடுகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடையாக இருந்தன.

சென்னை:

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கட ந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.

கடந்த 2 ஆண்டாக பல்வேறு கட்டுப்பாடுகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடையாக இருந்தன. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கி இருப்பதால் எப்போதும் போல விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் இந்து முன்னணி நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர். போலீசாரிடம் முன் அனுமதி பெற்று சிலைகளை அமைப்பதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.

சிலைகளை நிறுவிய பிறகு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் போலீசார் சுற்றறிக்கைகளை தயாரித்துள்ளனர். இதில் சிலைகள் இருக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.

சென்னையில் 5500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய இந்து முன்னணி அமைப்பினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

சென்னை மாநகர காவல் துறையின் அனுமதியுடன் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தொடர்பாக சிந்தாரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதன் பின்னர் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் கார்த்திகேயன், செயலாளர் மனோகரன் ஆகியோர் கூறும்போது, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அப்போது மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உடன் இருந்தார்.

விநாயகர் சிலை வழிபாட்டின்போது பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்கிற கோஷத்தை இந்து முன்னணி அமைப்பினர் முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

இவர்களை போன்று பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் விநாயகர் சிலை வழிபாட்டுக்கு தயாராகி வருகிறார்கள். இதையடுத்து சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News