தமிழ்நாடு

யானை வழித்தடத்தில் தோட்டம்: தோட்டக்கலைத்துறை செயலாளருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Published On 2024-06-29 02:27 GMT   |   Update On 2024-06-29 02:27 GMT
  • தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்.
  • தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை:

வனம், வன விலங்கு, சுற்றுச்சூழல் ஆகிய வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த சிறப்பு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள், நேற்று வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது, தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். வனப்பகுதியில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

ஏற்கனவே இந்த மனுவுக்கு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பின்னர், ''ஊட்டி கல்லார் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தோட்டத்தை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும்.

தோட்டக்கலைத் துறை செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். இதுதொடர்பான வழக்கை வருகிற ஆகஸ்டு 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News