தமிழ்நாடு

பூண்டு விலை குறையத் தொடங்கியது

Published On 2024-03-03 04:51 GMT   |   Update On 2024-03-03 04:51 GMT
  • விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
  • கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது.

சென்னை:

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து பூண்டு விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு (ஜனவரி மாதத்தில்) ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆனது. ஆனால் அதன் பிறகு ராக்கெட் வேகத்தில் அதன் விலை அதிகரித்தது.

மலைப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய இந்த பூண்டின் விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்ததாலேயே அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாசலபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வரத்து அப்போது குறைந்திருந்தது.

விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் அப்போது ஒரு கிலோ பூண்டு ரூ.500 வரை விற்பனை ஆனது. மற்ற மாவட்டங்களில் ரூ.550 வரை விற்பனை ஆனதை பார்க்க முடிந்தது.

மாத பட்ஜெட்டில் தவிர்க்க முடியாத உணவு சார்ந்த பொருட்களில் ஒன்றான பூண்டின் இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக அமைந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து விலை அதே நிலையில் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து பூண்டு வரத்து சற்று அதிகரித்ததால் அதன் விலை குறையத் தொடங்கியது.

கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது. அதன் பின்னரும் விலை குறைந்து வந்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் அதன் விலை மேலும் கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்து ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.350 வரையில் விற்பனை ஆனது.

தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மற்றும் சீனாவில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் அதன் விலை மேலும் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News