எண்ணூர் தொழிற்சாலையில் வாயு கசிவு: போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது வழக்குப்பதிவு
- ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உரத்தொழிற்சாலையயை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
- இதற்கிடையே தொழிற்சாலை முன்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
எண்ணூர், பெரிய குப்பத்தில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மூச்சுதிணறல், மயக்கம் என கடுமையாக பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த அமோனியா வாயு கசிவின் தாக்கம் சுற்றி உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்திலும் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உரத்தொழிற்சாலையயை முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக நெட்டு குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், தாழம் குப்பத்தைச் சேர்ந்த முரளி, வெங்கடேசன், பார்த்தசாரதி உள்பட 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் தொழிற்சாலை முன்பு அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து, ஒலிபெருக்கி வைத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ், சுதாகர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே தொழிற்சாலை முன்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.