தமிழ்நாடு (Tamil Nadu)

மழையில் நனைந்தபடி அரசு பஸ்சில் சென்ற பயணிகள்

Published On 2024-08-31 08:56 GMT   |   Update On 2024-08-31 08:56 GMT
  • பஸ்சின் உள்ளே நிற்க கூட முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
  • பஸ்களை மாற்றி விட்டு புதிய பஸ்களை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பி3 என்ற டவுன் பஸ் பவானி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம், சூளை, கனிராவுத்தர்குளம், மாமரத்து பாளையம், கரும்பு காடு, சித்தோடு, ஆவின் நிலையம், லட்சுமிநகர் பைபாஸ், காலிங்கராயன் பாளையம் வழியாக பவானி வரையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஓரு மணி நேரமாக லேசானது முதல் கனமழை வரை என பல்வேறு பகுதியில் மழை பெய்தது. இந்த நிலையில் வழக்கம் போல் பி3 டவுன் பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பவானிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.


மழை காரணமாக பஸ்சின் மேற்கூரை ஓட்டை உடைசலுடன் இயக்கப்பட்டதால் பயணம் செய்த பயணிகள் பஸ் உள்ளே மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் பஸ்சின் இருக்கையில் மழைநீர் கொட்டியதால் இருக்கையில் அமர்ந்து செல்ல முடியாமலும் பஸ்சின் உள்ளே நிற்க கூட முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

இந்த சம்பவத்தை பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது போன்ற பஸ்களை மாற்றி விட்டு புதிய பஸ்களை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News