தமிழ்நாடு

அரசு மருத்துவர்களின் ஆதரவுக்கரம்: முகவரி மறந்த பாட்டி பேத்தியிடம் ஒப்படைப்பு

Published On 2023-10-12 10:13 GMT   |   Update On 2023-10-12 10:13 GMT
  • சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.

சென்னை:

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி தலையில் காயத்துடன் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மயங்கி கிடந்தததாகத் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்துக்கு தையல் போடப்பட்டு சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவரது முகவரி, குடும்பத்தினர், சொந்த ஊர் எதுவுமே அவருக்கு நினைவில் இல்லை.

அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.

அதற்கு மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வந்த போது திடீரென ஒரு நாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைகள் அவ ருக்கு அளிக்கப்பட்டு பாதிப்பு குணப்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சாந்தி, முதுநிலை மருத்துவர் டாக்டர் பிரவீண் குமார், டாக்டர் குடியரசு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே, அவரது விவரங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து மூதாட்டியின் உறவினர்களைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டோம்.

அதன் பயனாக, அவரின் பேத்தி தேன்மொழி அதைப் பார்த்து மருத்துவமனைக்கு வந்தார். அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மூதாட்டி அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி விடுவதாக அவர் அப்போது கூறினார்.

இதையடுத்து, அந்த மூதாட்டியை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தன் நிலை மறந்த மூதாட்டிக்கு மனித நேயத்தோடு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News