மஹா சிவராத்திரி விழா: கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கிய பாட்டி
- வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.
- 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெருவில் உள்ளது பத்திரகாளியம்மன் கோவில். இங்கு கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .
இதில் மகா சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற சுமார் 90 வயது பாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இதற்கு முன்பு, வள்ளியம்மாள் மற்றும் கிழவியாத்தா என்ற பாட்டிகள் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கி வந்தார்கள்.
தொடர்ந்து முத்தம்மாள் பாட்டி கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வருகிறார். இதில் 40 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்து பின்னர் வெறும் கையில் அப்பம் சுடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும்.
முன்னதாக பாசிப்பயறு, தட்டாம் பயறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் வைத்து இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டையை பெண்கள் நேர்த்தி கடனாக தயார் செய்து கொடுக்கின்றனர்.
கடந்த 60 வருடங்களாக அப்பம் சுட்டு வரும் மூதாட்டி 61-வது வருடமாக வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காகவும், மகா சிவராத்திரி வழிபாடு செய்வதற்காகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.