ஜி.எஸ்.டி. கூட்ட விவகாரம்: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான தகவலை பரப்புகிறார்கள்- ஜி.கே.வாசன்
- உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
- எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உள்ளூர் தொழில் அமைப்பினருடன் ஜி.எஸ்.டி சம்பந்தமாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தமிழ் நாடு ஒட்டல்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசனிடம், உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது சம்பந்தமாக சமூக ஊடகத்தின் மூலமாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.
உண்மை நிலை இப்படி இருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக எதிர்க்கட்சிகள் உண்மை சம்பவத்தை மறைத்து தவறான அறிக்கைகள் கொடுப்பதும், சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை தவறாக சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. இதன் மூலம் தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய நிதியமைச்சகத்துக்கும், தொழில் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்த முயற்சிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.
எனவே ஜி.எஸ்.டி சம்பந்தமாக உள்ள நியாயமான கோரிக்கைகள் நிறைவேற அடித்தளமாக அமைந்த இந்த கூட்டத்தை அரசியல் கண்ணோட்டத்திற்காகப் புரிந்தும், புரியாமலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.