3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை உஷார்
- தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
- கூடுதல் ஊழியர்களோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 14 கால்நடைகள் இறந்துள்ளன. 7 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் 2.66 கோடி பேரின் செல்போன் எண்களுக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பேரிடர் மீட்புப் படையினரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 23-ந் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களுக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். கூடுதல் ஊழியர்களோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்சொன்ன பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையத்திலிருந்து எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், மீன்வளத் துறை ஆணையர் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.