ஊட்டியில் 3 மணி நேரம் கொட்டியது: கனமழையால் நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்
- வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
- மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர்.
ஊட்டி:
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு வானில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இது சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது.
ஊட்டியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளாகினர்.
கோத்தகிரி, குந்தா, கெத்தை, பாலகொலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஓடை வாய்க்கால்களில் வெள்ளம் கரைபுரண்டது. அப்போது அங்கு திடீர் அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மழை வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது.
ஊட்டி, கோத்தகிரி, குந்தா, கெத்தை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட மலைப் பயிா்களை அதிக பரப்பளவில் பயிரிட்டு உள்ளனர். அங்கு உள்ள விளைநிலங்களை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த நகராட்சி, ஊராட்சி ஊழியா்கள், நீர்வரத்து கால்வாய் ஓடையில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தூா்வாரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.