தமிழ்நாடு (Tamil Nadu)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை- தொடர்விடுமுறையால் அருவிகளில் குவிந்த மக்கள்

Published On 2024-10-12 09:53 GMT   |   Update On 2024-10-12 09:53 GMT
  • அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
  • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

நெல்லை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகள், மலைப்பிரதேசங்கள், புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

புறநகரில் சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதமான காற்றும் வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. மாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக களக்காடு மலைப்பகுதியில் பெய்த மழையால் தலையணையில் நீர் வரத்து அதிகரித்தது. அங்கு அதிகபட்சமாக 27.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

நேற்று ஆயுதபூஜை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாமாக இருந்தது. மாநகரில் மழை பெய்யவில்லை. எனினும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.

அணைகளை பொறுத்த வரை பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறில் 27 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் அங்கு 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 430 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மலைப்பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை வினாடிக்கு 552 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 94.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 106.33 அடி நீர் இருப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதி யில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கனமழை பெய்தது. நாலுமுக்கில் 29 மில்லிமீட்டரும், ஊத்தில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. காக்காசியில் 19 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக அங்கு 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 55.50 அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 46 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 49.87 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அங்கு முகாமிட்டு குளித்து மகிழ்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடம்பூரில் அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பெய்தது. கயத்தாறில் 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

Similar News