தமிழ்நாடு

மழையில் நனைந்த பருத்தி மூட்டைகள்.

திருவாரூரில் கனமழை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த 2000 பருத்தி மூட்டைகள் நனைந்து சேதம்

Published On 2023-06-28 04:32 GMT   |   Update On 2023-06-28 04:32 GMT
  • 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
  • குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது.

திருவாரூர்:

திருவாரூர் நாகை சாலையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. திருவாரூர் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

கடந்த வாரம் விற்பனைக்காக கொண்டு வந்த பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்ய முடிவு எட்டப்பட்டது.

இந்நிலையில் 3600- க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் விவசாயிகள் நேற்று செவ்வாய்கிழமை ஏலத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவு கூடுதல் விலை கிடைக்காமல் குறைந்த பட்சம் ரூ.46 முதல் அதிகபட்சம் ரூ.63 வரை ஒரு கிலோ பருத்தி விலை போனது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் ஏலம் முடிந்த பின்னர் மீதமுள்ள பருத்தி மூட்டைகள், அடுத்த ஏலத்திற்காக உள்ள பருத்தி மூட்டைகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது மாலையில் திடீரென பெய்த கனமழையால் 2000 பருத்தி மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

ஏற்கனவே உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மன வேதனையில் இருந்த நிலையில் மாலையில் பெய்த மழை விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . மேலும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News