ஓசூர் வனக்கோட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணி
- 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன.
ஓசூர்:
ஓசூர் வனக்கோட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்கள் நடைபெற்றது.
இதில், 200-க்கும் மேற்பட்ட பறவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட காப்புக்காடுகளுக்கு வெளியே உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உட்பட மொத்தம் 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மேலும், தொலைநோக்கு கருவிகள், கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, சிறிய காட்டு ஆந்தை, செந்நாரை, மீன்கொத்திகள், சுடலை குயில் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உட்பட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு, பதிவு செய்யப்பட்டன.
குறிப்பாக ஓசூர் டி.வி.எஸ்., தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நீர்நிலையில் மஞ்சள் மூக்கு நாரை பறவை கண்டறியப்பட்டது. இந்த பறவைகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த நீர்நிலையில் தங்கி பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து பராமரித்து அங்கிருந்து செல்வது வழக்கம்.
டி.வி.எஸ்., வளாகத்திலுள்ள ஏரியில், மரங்கள் மற்றும் புதர் செடிகள் அதிகளவில் காணப்படுவதாலும், சீதோஷ்ண நிலை இப்பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருப்பதாலும், கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இந்த பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.