செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி?
- சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று இணையதள சேவைகள் என்பதை 'க்ளிக்' செய்ய வேண்டும்
- உரிமையாளர்கள் தங்களது சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள முகப்பு பக்கத்துக்கு சென்று இணைய வழியில் ரூ.50 பணம் செலுத்த வேண்டும்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இணைய வழியில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது குறித்த வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று இணையதள சேவைகள் என்பதை 'க்ளிக்' செய்ய வேண்டும். அதில் உள்ள பல சேவைகளில் செல்லப் பிராணிகளின் உரிமம் என்பதனை தேர்வு செய்ய வேண்டும். 'நியூ யூசர்' என்பதனை தேர்வு செய்து அதில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து 4 இலக்க எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
பின்னர், தங்களது செல்போன் எண்ணையும், 4 இலக்க எண்ணையும் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் என்பதை தேர்வு செய்யவும்.
செல்லப் பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி சான்றின் புகைப்படம், செல்லப் பிராணிகளின் புகைப்படம், ஒரு வருடத்துக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதிமொழி அளித்து பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி டாக்டர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பின்னர், உரிமையாளர்கள் தங்களது சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள முகப்பு பக்கத்துக்கு சென்று இணைய வழியில் ரூ.50 பணம் செலுத்த வேண்டும்.
இதையடுத்து, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு ('லிங்க்') உருவாகும். அதைக்கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் ஆண்டு தோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.