மரித்து விடாத மனித நேயம்: குப்பை கழிவுகளிலிருந்து முதியவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார்
- தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதையாக கிடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற செங்கிப்பட்டி போலீஸ் ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். பின்னர் அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.