தமிழ்நாடு

கடற்கரை மக்களுக்கான ஒரு அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன்- பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான எழுத்தாளர் ஜோ டி குரூஸ்

Published On 2024-01-26 08:05 GMT   |   Update On 2024-01-26 08:05 GMT
  • “ஆழி சூழ் உலகு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  • நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன்.

நெல்லை:

குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பத்ம விபூஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்து பாளை புனித சவேரியார் பள்ளியில் அவர் தனது உயர்கல்வியை முடித்தார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.

தமிழ் நெய்தல் குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் இவர் பணியாற்றினார். இவர் கொற்கை, ஆழிசூழ் உலகு உள்ளிட்ட பல நாவல்களையும், புலம்பல்கள் என்ற கவிதையையும், விடியாத பொழுதுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவண படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது கொற்கை என்ற புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் எழுதிய "ஆழி சூழ் உலகு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனங்களை இவர் எழுதி உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடற்கரை மக்களுக்கான அங்கீகாரமாக இதனை நான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை.

நான் எனது நிலத்துக்கான மக்களுக்கான பணிகளை செய்வதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறேன். அந்த வகையில் அதனை மத்திய அரசு அங்கீகரித்திருப்பதில், கடலோர மக்களை அரசு மதிக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம் என்றார்.

Tags:    

Similar News