நீங்கள் கோவில் கட்டினால் மக்கள் வழிபடுவார்கள்: ஆனால் தேர்தலில் உதயசூரியனுக்கே வாக்களிப்பார்கள்- உதயநிதி
- வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.
- செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
சென்னை:
மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-
இங்கே வரவேற்கும் போதும் சிலர் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்தீர்கள். அதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. 'சின்னவர்' என்று கூப்பிடுகிறீர்கள். வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.
அதற்காக சின்னவர், இளைய கலைஞர், வாலிபப் பெரியார் என்றெல்லாம் அழைப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். சட்ட மன்ற உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர்… என்ற இந்தப் பொறுப்பெல்லாம் இன்றைக்கு வரும் நாளைக்குப் போய்விடும். ஆனால் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதுதான் நிரந்தரம். இப்போது அமைச்சராக இருப்பதால் கொஞ்சம் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருக்க முயற்சிக்கிறேன். தயவுசெய்து பட்டப்பெயர் வைத்து அழைப்பதை தவிர்த்து விடுங்கள்.
தேர்தல் பணியை நம்முடைய தலைவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். மூன்று குழுக்கள் அமைத்தார். அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் நான் இருக்கிறேன்.
ஒவ்வொரு தொகுதியாகச் சந்தித்து அதில் இருக்கக் கூடிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் வரச் சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகளைச் சந்திக்கிறோம். தொகுதியில் இருக்கக் கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள், மனக் கசப்புகள், தொகுதிப் பிரச்சினைகள், வெற்றி வாய்ப்புகள் என்று இப்படி தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்.
இன்றோடு 36 தொகுதி முடித்துவிட்டோம். மீதியுள்ள 4 தொகுதிகளையும் முடித்து விடுவோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால் நிச்சயம் 40க்கு 40ஐ நாம்தான் வெற்றி பெற போகிறோம்.
நம்முடைய தலைவர் யாரை முடிவு செய்கிறாரோ, தி.மு.க. யாரை முடிவு செய்கிறதோ அவர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
சமீபத்தில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்தார்கள். இந்த நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், கணவரை இழந்தவர். அந்தக் காரணத்திற்காக அவரை அழைக்கவில்லை. ஆனால் செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
10 நாட்களுக்கு முன்பு இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. எந்த மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ எதிரான கட்சியல்ல. எங்களுக்கு ''ஒன்றே குலம், ஒருவனே தேவன்''. நீங்கள் கோவில் கட்டினால் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக வழிபடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் உதய சூரியன் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இந்த ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சாமியார்கள் யாருமே செல்லவில்லை. மோடி வருகிறார், அதனால் நாங்கள் யாரும் வரமாட்டோம் என்று சங்க ராச்சாரியார்கள் சொல்லிவிட்டார்கள். இதைத்தான் 4 மாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன். அனைவரும் சமம் என்று அப்போது நான் பிரதமருக்கும் சேர்த்துப் பேசியிருக்கிறேன்.
அதற்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, ''மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் கலைஞரின் பேரன். சொன்னால் சொன்னது தான்!'' என்று சொல்லிவிட்டேன். என் மீது தவறு இல்லை, பிறப்பால் அனைவரும் சமம். இங்கு ஜாதி, மத பாகுபாட்டுக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இங்கே ஒரு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது. ஓ.பி.எஸ்.தான் முதலில் கைதாவார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் கைதாவார் என்று அதேநாள் மாலையில் ஓ.பி.எஸ். சொல்கிறார். இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கைதாகப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். கைதாகி சிறைக்குப் போகும்போதாவது தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டாம், கால் வலி வரும் என்ற கோரிக்கையை மட்டும் நான் அவர்களுக்கு வைக்கிறேன்.
2021-ல் அடிமைகளை விரட்டி வீட்டுக்கு அனுப்பினோம். இப்போது இந்தத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நமக்கு இருக்கிற ஒரே குறிக்கோள் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி. நாற்பதும் நமதே, நாடாளுமன்றமும் நமதே.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.