தமிழ்நாடு

ஜாபர்சாதிக்கின் மனைவி-தம்பி மீதும் அமலாக்கத்துறை வழக்கு

Published On 2024-07-24 08:14 GMT   |   Update On 2024-07-24 08:14 GMT
  • காவலில் எடுத்து ஜாபர்சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • 2 பேரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:

டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கடந்த மார்ச் மாதம் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஜாபர்சாதிக் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில் ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதன் அடிப்படையிலேயே ஜாபர்சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர்சாதிக்கிடம் அங்கு சென்றே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

தற்போது காவலில் எடுத்து ஜாபர்சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜாபர்சாதிக்கின் மனைவி அமீனா பானு, தம்பி முகமது சலீம் ஆகிய 2 பேர் மீதும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜாபர்சாதிக்கின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்தே இருவர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அமீனா பானுவும், தம்பி முகமது சலீமும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதால் அதன் மீதான முடிவு தெரியும் வரையில் 2 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

29-ந்தேதி ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையின் போது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அமீனா பானு, முகமது சலீம் இருவரையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த நடவடிக்கைக்கு பயந்து 2 பேரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News