தமிழ்நாடு

வாகனங்களுக்கான வரி உயர்வு அமல்: ரூ.5 லட்சத்துக்கு கார் வாங்கினால் ரூ.60 ஆயிரம் வாழ்நாள் வரி செலுத்த வேண்டும்

Published On 2023-11-09 10:28 GMT   |   Update On 2023-11-09 10:28 GMT
  • படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
  • ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கு வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள். பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

வாகனங்களுக்கான வரியை உயர்த்தி சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வாகனங்களுக்கான புதிய வரி நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 சதவீதம் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 20 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வருடத்துக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்கு உள்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8.25 சதவீதமும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 10.25 சதவீதமும், ஓராண்டு முதல் 2 ஆண்டுக்குள் உள்ள ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 8 சதவீதமும், ரூ.1லட்சத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 10 சதவீதமும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ் நாள் வரி அதன் விலைக்கு ஏற்ப 6 சதவீதம் முதல் 9.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

2 ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் ரூ.1 லட்சத்துக்கு மேல் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட புதிய கார்களுக்கு வாழ்நாள் வரி 12 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களுக்கு 20 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ரூ.5 லட்சத்துக்கு கார் வாங்கினால் ரூ.60 ஆயிரம் வாழ்நாள் வரியும், ரூ.1 லட்ச த்துக்கு மோட்டார்சைக்கிள் வாங்கினால் ரூ.10 ஆயிரம் வாழ்நாள் வரியும் செலுத்த வேண்டும்.

சரக்கு வாகனங்களில் சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் கிலோ முதல் 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ரூ.3100 வரை எடைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு உள்ளது.

வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகங்களில், 35 பேர் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான காலாண்டு வரி ரூ,4,900 ஆகும். 35 பேருக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

டிரெய்லர் வாகனங்களுக்கு ஏற்றப்படும் எடையின் அளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் 4 பேர் பயணிக்கும் வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது.

கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.15 ஆயிரம், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்கக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஓட்டுனர் சேர்த்து 7 முதல் 13 பேர் வரை ஏற்றக் கூடிய ரூ.5 லட்சத்துக்கு உள்பட்ட புதிய சுற்றுலா சீருந்துகளுக்கான வாழ்நாள் வரி அதன் விலையில் 12 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை கொண்ட சீருந்துகளுக்கு 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 20 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News