தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவுநீரை ஊற்றினால் நடவடிக்கை- அபராதம் விதிக்க உத்தரவு
- தாசில்தார் மதிவாணன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
சோழவரம் ஒன்றியத் திற்குட்பட்ட ஆங்காடு, சோழவரம், நல்லூர், பகுதி களில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர் கால்வாய் அடைப்புகளால் வெளியே செல்ல முடியாமல் சோழவரம் செங்காளம்மன் கோவில் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதைத்தொடர்ந்து பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர்கள் ஆகியோருடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது சோழவரம் பகுதியில் வீடுகளில் எடுக்கப்படும் கழிவு நீரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லாரிகளில் வருவதால் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் மழை நீரில் கழிவுநீர் கலந்து ஊருக்குள் செல்வதாகவும் சோழவரம் ஊராட்சி தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து தேசிய நெஞ்சாலையில் கழிவு நீரை கொட்டும் லாரி, டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தாசில்தார் மதிவாணன் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.