தொடர் மழை எதிரொலி: ஊட்டி மலை ரெயில் மீண்டும் ரத்து
- மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
- மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 18-ந் தேதி மலைரெயில் பாதையில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 18-ந் தேதி தல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இன்று ஒருநாள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.