சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. சிக்கிய ஆவணங்கள்: ரூ.3000 கோடிக்கு கணக்கு இல்லை
- முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
- செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதிகளுக்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்ப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலக வருவாய் தொடர்பான கணக்குகளை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.
அவ்வகையில் சென்னை அருகே உள்ள செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம், திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 17 மணி வரை நீடித்த இந்த சோதனையில், சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டவில்லை எனவும் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டவில்லை என்றும் வருமானவரி நுண்ணறிவு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வட சென்னை பகுதியிலேயே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறுகிறது. செங்குன்றம் பகுதியில் காலி இடங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. பத்திர பதிவு நடைபெறும் நேரங்களில் விதிகளுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி உள்ளனர்.