வடசென்னையில் அறிவுசார் மையம்-நூலகம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு
- முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறியதாவது:-
சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனம் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்த வரை போட்டி தேர்வுக்கான பயிற்சி குடிமை தேர்வுக்கான பயிற்சி மையம் இயங்கி வருவதோடு, முதன்மை தேர்வாக இருந்தாலும் ஏறத்தாழ 300 மாணவர்கள் பயிற்சி கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களை அரசு கருத்தில் கொண்டு தான் பல நூலகங்களிலும் போட்டி தேர்வுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கான வசதி உள்ளதோடு, முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்திலும் அதிகளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதேபோல் வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளது. சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கோவையிலும் திருச்சியிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது போல, எதிர்காலத்தில் வட சென்னையில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்றார்.