கைதிக்கு மது கொடுத்த விவகாரம்: ரத்த பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்
- அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.
சேலம்:
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசிங் (வயது 35). இவரை அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதற்கான ஆணையை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகிரி கிளை சிறைக்கு சென்றார். அங்குள்ள சிறையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகளை வைக்கக் கூடாது என்பதால் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கிளை சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கிருஷ்ணசிங்கை அழைத்து வந்தனர்.
அப்போது சேலம் சிறை வார்டன்கள் கிருஷ்ணசிங்கை சோதனை செய்தனர். அவர் மீது மது வாசனை வந்தது. இது பற்றி சிறை அதிகாரிகளிடம் வார்டன்கள் தெரிவித்தனர். பின்னர் சிறை மருத்துவர் அங்கு வந்து கிருஷ்ணசிங்கை பரிசோதனை செய்தபோது அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து ரத்த பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இதில் சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்று பார்த்தபோது கைதிக்கு 3 லிட்டர் தண்ணீரை வாங்கிக் கொடுத்ததும், மதுவாடையை போக்குவதற்காக வாயை சுத்தப்படுத்து வதற்கான ஸ்பிரே வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதுபற்றி வார்டன், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கைதிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரத்த மாதிரியை எங்களிடம் தர வேண்டும். நாங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் முடிவை பெற்று தருகிறோம் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதேபோல் சிறை அதிகாரிகளும் எங்களுக்கும் ஒரு ரத்த மாதிரி தாருங்கள். நாங்களும் பரிசோதனை செய்து கொள்கிறோம் என்றனர்.
இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 11.30 மணியளவில் ரத்த மாதிரி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைதியிடம் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும், சிறை வார்டனும் ரத்த மாதிரியை ஆய்வகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கான முடிவு நாளை கிடைத்த பிறகே கைதி மது அருந்தினரா? கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், கைதியின் ரத்த மாதிரி அறிக்கை கிடைத்த பிறகு அதில் அவர் மது குடித்து இருந்தார் என தெரிவிக்கப்பட்டு இருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.