கரூர் ஐடி ரெய்டின் போது வெளியே திரண்டவரை தாக்கிய விவகாரம் - 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
- முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு.
- வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தகவல்.
தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். முற்றுகையிட வந்தவர்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சோதனையின் போது வீட்டின் வெளியே திரண்ட குமார் மற்றும் மேலும் சிலரை அதிகாரிகள் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மீது கையால் தாக்கியது, தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.