தமிழ்நாடு

ஆணவக் கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தவர் கொ.ம.தே.க. வேட்பாளரா? - பழைய வீடியோவால் சர்ச்சை

Published On 2024-03-19 09:13 GMT   |   Update On 2024-03-19 10:45 GMT
  • பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
  • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

Tags:    

Similar News