ஜாக்டோ-ஜியோ சார்பில் சாலைமறியல்: 500-க்கும் மேற்பட்டோர் கைது
- 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
- திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கட்ட பொம்மன் சிலை சந்திப்பில் இன்று காலை ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மறியல் செய்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். பிப்ரவரி 10-ந் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 15-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். 26-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.