தமிழ்நாடு

ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் சோதனை முடிந்தது: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

Published On 2024-04-10 06:47 GMT   |   Update On 2024-04-10 06:47 GMT
  • சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

சென்னை:

டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக் கில் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை திரட்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இது தொடர்பாக இயக்குனர் அமீரை டெல்லிக்கு நேரில் அழைத்து 10½ மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது அமீரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பல்வேறு தகவல்களை திரட்டியுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம், ஜாபர் சாதிக்கின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஜாபர்சாதிக் போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாக கூறப்படுவதால் இந்த பணம் எந்தெந்த வழிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய தகவல்களையே அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது திரட்டி வருகிறார்கள்.

சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளதா? சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அது தொடர்பாகவே ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் சிறையில் உள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த இயக்கு னர் அமீர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் ஏற்கனவே கடந்த 2-ந்தேதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அழைத்துள்ளனர்.

இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் முடிவில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News