800 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
- வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
- ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. செங்கவள நாட்டார்களால் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்தனர்.
ஜல்லிக்கட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து உள்ளூர் காளைகளும் பின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில
காளைகள் களத்தில் நின்று கெத்து காட்டியதோடு, அருகில் வந்த காளையர்களை பந்தாடியது.
பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அடக்கினர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, கிரைண்டர், டைனிங்டேபிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.