தமிழ்நாடு (Tamil Nadu)

ஜெயக்குமார் வழக்கு: சந்தேகத்திற்கு இடமான செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அதிகாரிகள் விசாரணை

Published On 2024-06-14 06:48 GMT   |   Update On 2024-06-14 06:48 GMT
  • 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர்.
  • ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேற்று ஏடிஜிபி வெங்கட்ராமன், சி.பி.சி.ஐ.டி . ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெல்லைக்கு வருகை தந்து ஜெயக்குமார் இறந்து கிடந்த அவரது தோட்டம், அவரது வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களது மகன்கள் கருத்தையா, மார்ட்டின் மற்றும் ஜெயக்குமாரின் மனைவி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் 'டம்ப் டவர்' மூலமாக ஜெயக்குமார் மரணம் அடைந்த நாளன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் காட்டப்பட்ட நிலையில் அதனை நேற்று கவனத்துடன் பகுப்பாய்வு செய்தனர். அதில் 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர். அந்த 25 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த எண்கள் அனைத்தும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் மற்றும் கொலை செய்யப்பட்ட நாள் அன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தேக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர்களிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கும் பட்சத்தில் இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.

இதனால் ஜெயக்குமார் வழக்கு சூடு பிடித்துள்ளது. இதன் மூலமாக ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று 2-வது நாளாக நெல்லையில் முகாமிட்டு இந்த விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்.

மேலும் அவர் விசாரணை குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி அதன்படி விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News