ஜெயலலிதாவை மதவாத தலைவர் போல் களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்புவதா?- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்
- அம்மா, தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக கோவில்களில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- தமிழ் நாடு அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் அம்மாவின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும்.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அம்மா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் அம்மா. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, அம்மா மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
புரட்சித்தலைவர் வழியில், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் அம்மா.
அம்மா, தமது ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக கோவில்களில் அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம் 2001-ம் ஆண்டு அம்மாவால் தொடங்கப்பட்டது. புதிதாக வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டது. வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் அம்மாவால் ரூ.1 கோடி உயர்த்தப்பட்டது.
அம்மா, தமது ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
அம்மா, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி உறுதியாக இருந்திருக்கிறார்கள். தமிழ் நாடு அரசியல் உள்ளவரை அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவராம் அம்மாவின் நெடும்புகழ் அவ்வண்ணமே நிலைத்து நிற்கும்.
அண்ணாமலை, தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ்நாட்டில் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் அம்மா இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.