குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
- ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றால அருவிகளுக்கு வரும் தண்ணீரின் வரத்தும் சீரானது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை முதல் மிதமான வெயில் அடித்த தால் அருவி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மட்டும் இன்றி ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதியது.
விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் நீராடி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு சென்றனர்.
மெயின் அருவி பகுதியில் இன்று காலை முதலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.