எரிவாயு குழாய்களை சாலையோரமாக பதிக்க வலியுறுத்தி விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்
- பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
- கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
பல்லடம்:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது.
இந்தநிலையில் எரிவாயு குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிவாயு குழாய்களை ஐ.டி.பி.எல். நிறுவனம் அமைத்து வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயு குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தைச் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையம் கிராமத்தில் நேற்று விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோரும், கோடங்கிபாளையம் பெருமாகவுண்டம்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றுள்ளனர்.