தமிழ்நாடு

பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள சி.ஏ. பவுண்டேசன் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்- டிடிவி தினகரன்

Published On 2024-11-24 06:21 GMT   |   Update On 2024-11-24 06:21 GMT
  • கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.
  • இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.

சென்னை :

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ICAI) சிஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தேர்வுகளுக்கு இடைவிடாது தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தேர்வர்களும், தேர்வர்களின் பெற்றோர்களும் கருதுகின்றனர்.

எனவே, தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்.

Tags:    

Similar News