தமிழ்நாடு

அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் 'இரட்டை இலை' சின்னம்- ரஜினிகாந்த் பேச்சு

Published On 2024-11-24 07:24 GMT   |   Update On 2024-11-24 07:24 GMT
  • மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி அம்மாள் அவரை திருமணம் செய்து கொண்டார்.
  • கட்சி மற்றும் மக்கள் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மாள்.

ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவரை பாராட்டும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் காணொலியில் பேசி இருந்தார். அவரது பேச்சு வருமாறு:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆரின் துணைவியாரும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆன ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ என்னை நேரில் அழைத்தார் அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருதநாட்டு இளவரசி படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி அம்மாள் அவரை திருமணம் செய்து கொண்டார்.

எம்.ஜி.ஆர். சாதாரண மனிதர் அல்ல என்று அப்போதே அவர் கணித்திருந்தார். திரை உலகில் புகழின் உச்சியில் இருந்த போது தனது திரை வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு எம்.ஜி.ஆரை அவர் மணந்து கொண்டார். எம்.ஜி.ஆரை மிகவும் சந்தோசமாக வைத்துக்கொண்டதுடன் அவரை பாதுகாக்கவும் செய்தார்.

கடைசி வரை எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தார். ராமாவரம் தோட்டத்துக்கு யார் சென்றாலும் வயிறு நிறைய விருந்து வைத்து உபசரித்தார். சாப்பாடு என்றால் சாதாரண சாப்பாடு கிடையாது. சைவ, அசைவ சாப்பாடுகளும் நல்ல முறையில் போடப்பட்டன. தினமும் 300 பேருக்காவது எம்.ஜி.ஆரின் வீட்டில் ஜானகி அம்மாள் சாப்பாடு போட்டு விடுவார்.

கட்சி மற்றும் மக்கள் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி அம்மாள். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவர் ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்ததை அனைவருமே அறிவார்கள்.

நான் மூன்று முறை அவரை நேரில் சந்தித்து உள்ளேன். ராகவேந்திரா படத்தின் போது அவரை சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்த போது சந்தித்தேன். மூன்றாவது முறை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது என்னை அழைத்து சந்தித்தார். அவர் கையால் காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார். படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்.ஜி.ஆர். சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார்.

அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான்... கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, அவர் எடுத்த முடிவு... ஜெயலலிதா அம்மையாரிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் நல்ல குணம்.. பக்குவத்தை உணர்த்தியது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது

இன்று அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ள அ.தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசும் போது, விஜயகாந்துடன் திருமணம் முடிந்ததும் ராமாவரம் தோட்டத்துக்கு நேரில் சென்று எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் இருவரிடமும் வாழ்த்து பெற்றோம். இருவரும் மறையும் வரையில் எங்கள் மீது அன்பு செலுத்தினார்கள்.

அமெரிக்கா சென்று திரும்பிய போது எனக்கு ஜானகி அம்மாள் வாட்ச் வாங்கி வந்து கொடுத்ததை மறக்க முடியாது. எம்.ஜி.ஆர். நினைவாக எங்களுக்கு அளிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் கோட், அவரது பிரசார வாகனம் ஆகியவற்றை இப்போதும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News