திருமழிசை புதிய பஸ் நிலையம் மார்ச் மாதம் திறக்கப்படுகிறது- 2 மாடியில் நவீன வசதி
- இரண்டு அடுக்கு ‘பார்க்கிங்’ வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
- புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.
திருவள்ளூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம், மாதவரம் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. மாதவரத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களை திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டு அங்கு புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு பஸ்நிலையம் கட்டும்பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
கழிப்பறை வசதி மற்றும் பஸ் நிலைய பணியாளர்கள் ஓய்வறை, பஸ்களை நிறுத்தும் நடைமேடை உட்பட நவீன கூடுதல் வசதிகளுடன் ரூ.427 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.
புதிய பஸ்நிலையம் 2 மாடி கட்டிடத்தில் 70 புறநகர் பஸ்கள், 30 ஆம்னி பஸ்கள் 36 மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. மேலும் 48 புறநகர் பஸ்கள், 27 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 163 பஸ்களை நிறுத்தி வைக்க முடியும். பஸ் நிலையத்தின் கீழ்தளத்தில் 1,800 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், இரண்டு அடுக்கு 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன
தினமும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணிகள் வேகம் எடுத்து சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறும்போது, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ்நிலையம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மற்ற பஸ் நிலையத்தில் விடுபட்ட அனைத்து நவீன வசதிகளுடனும் இந்த பஸ்நிலைய பணிகள் நடந்து வருகிறது என்றார்.