சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து- ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
- ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
- சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
சேலம்:
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.